மழை – கடந்த வெயில் காலத்திலிருந்து இந்த
முதல் வரி எழுத வராமல் ‘வார்த்தைகளின்றி தவித்து‘ ஓர் வார்த்தையோடு நின்று
விட்டிருந்த இந்த டாகுமென்ட்- ஐ அடுத்த கட்டத்திற்கு கடத்தி செல்லும் மனநிலையை
கொடுத்ததும் மழை பெய்யும் இந்த ரம்மிய இரவு தான். மழை மனிதனை ரசிகனாக்குகிறது.மழை வரும் முன் வரும் மண் வாசனையும் , அந்த குளுமையும், துணைக்கு நல்ல பாடலும்
இருந்தால் அந்த தருணங்களில் அவனது மகிழ்ச்சியை குலைக்க எந்த தீய சக்தியாலும் முடியாது. இதே விஷயத்தை மழை பெய்யும் மாலை வேளையில் வேலையிலிருந்து நெடுந்தூரம் இருக்கும் தனது வீட்டிற்கு
நனைந்து கொண்டே போய்க்கொண்டு இருக்கும் யாரிடமாவது சொன்னால் அவரிடமிருந்து வாங்கி கட்டி கொள்ள வேண்டியது தான்.
மழை பல முகங்களை உடையது.
அதுவும் காதலிகளை போல் தான். இல்லாத பொழுதில் ஏங்க வைக்கும் ,வருகையை எதிர்பார்க்க
வைக்கும், அதன் வருகையை உணரும் அந்த முதல் நொடி மனம் துள்ளி குதிக்கும், அது நமது இயல்பு வாழ்கையை பாதிக்காத வரை நாமும் அதை ரசிப்போம்,
சிறிது நேரத்தில் செய்வதறியாமல் தவிப்போம் ,விடாப்பிடியாக பிடித்துகொண்டு வேறு
எதையும் செய்ய விடாமல் கொடுமை செய்தால் சில சமயம் சாபங்களும் வாங்கும். மழையை
ஒருவன் நேசிப்பதும் அவனை அது எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை பொறுத்ததே.
மனிதனின் அத்தியாவசியமான குடிநீருக்காகவே வரும்
மழைக்கே அவனுடைய நிபந்தனையற்ற காதல் கிடைப்பது இல்லை. அதே மழை சில சமயம்
கோபங்கொண்டு ஏற்படுத்தும் சேதாரங்களும் ஏராளம். இந்த ஒரு விஷயத்தில் மழை வெயிலை
விட்டு வேறுபடுகிறது. எந்த சேதாரமும் செய்யாத வெயிலை யாரும் எதிர்பார்ப்பது கிடையாது.
ஊரையே அழிக்கும் மழைக்கு தான் காத்து கிடக்கிறோம்.
மழை தனியாக ஒரு
நினைவுச்சங்கிலியை என்னிடம் விட்டு செல்கிறது. மழையினால் ஏற்பட்ட சில நிகழ்வுகள்
அப்படியே நினைவுகளில் தங்கி விடுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வேலை செய்த
துறை மழையினால் நேரடியாக பாதிக்க
படும்படியான கட்டுமான துறை .பல வேளைகளில் மழை பெய்வது வரம் போன்று இருக்கும். பெங்களுருவுக்கும்
மாலை நேர மழைக்கும் அவ்வளவு ராசி. மாலை மழை பெய்யும் பல நாட்களில் வேலை
நின்றுவிடும்.வேலை செய்ய மூட் இல்லாத பொழுது அது உதவியாய் அமையும். எந்நாளும் இலாத
பொன்னாளாய் என்றாவது வேலையை முடித்து விடலாம் என்று அக்கறையாய் ஓடிக்கொண்டிருந்தால்
மழை சனியன் பெய்து தொலையும். அந்த மழையில் நனைந்து கொண்டே கீழ் உள்ளவரையும் வேலை
செய்ய வெய்த்ததற்கு ஹிந்தி,பெங்காலி, ஒடியா. போஜ்புரி போன்ற மொழிகளில் சபிக்க
பட்டிருப்பேன். எனக்கு மழையில் நனைவது பிடிக்கும் அதனால் தவிர்க்க முடியாத வேலையாயிருந்தால்
நனைவது பற்றி கவலையிருந்ததில்லை.என்னுடைய அந்த திடீர் லட்சிய வெறிக்காக
அடுத்தவர்களையும் நனைய விட்டது எல்லாம் கொடுமை தான்.
மழையில்
நனைவதற்கு வீட்டிலே இருந்த வரைக்கும் எப்போதும் ஒரு தடை உண்டு. ஊரை சுற்றி உள்ள
எல்லா இடங்களிலும் மழை பெய்து ஊரில் பெய்யாத பொது “எங்கெங்கேயோ பெய்யுது நம்ம
ஊர்லதான் ஒரு தூரல் கூட போடா மாட்டேங்குது “ என்று புலம்புகின்ற பாட்டியும்,அம்மாவும்
மழை வரும் நேரத்தில் நனைவதற்காக நான் வெளியில் போகிறேன் என்றால் “கூடாது” என்பதை
தவிர எதுவும் சொன்னது இல்லை.
மழையை ரசித்துகொண்டே
நனைந்த தருணங்களில் சில மனதில் இருந்து நீங்காதவை.அது கல்லூரியில் படித்து கொண்டிருந்த
காலம்,நானும் என் அறை நண்பனும் அந்த பெரிய கல்லூரி வளாகத்தில் சுற்றி கொண்டிருந்த
போது திடீர் மழை. இருவருக்கும் மழையில் நனைய நீண்ட நாள் ஆசை. எங்கும் நிற்காமல்
அப்படியே நனைந்தபடி மெதுவாக விடுதிக்கு நடந்து சென்றோம்.சிறிது நேரத்தில் நான்
அவனை திரும்பி பார்க்க, அவன் கேட்டான், “போயும் போயும் இவன் கூடத்தான் மழையில
நனைஞ்சிட்டு போறோம் நு தானே யோசிக்கிற“. நான் “ஆமா ,எப்டி கண்டுபிடிச்ச?”. அவன் “நானும்
அதேதான் நெனச்சேன்.உன் கூட எல்லாம் மழைல நனைஞ்சிட்டு போறேனேநு ”.
அடுத்த நாள் காலை 9
மணிக்கு ஒரு முக்கியமான
நுழைவு தேர்வு இருந்த ஒரு இரவில் படிக்கலாமா வேண்டாமா என்று யோசனையிலேயே மணி
இரண்டு ஆகி விட்டிருந்தது. அப்பொழுது பெய்த ஒரு பேய் மழையில் நனைய ஆர்வம் வந்தது.
நனைந்து விட்டு வந்து இரவு நேர பெங்களுரு குளிரில் நடுங்கிகொண்டு தூங்க முடியாமல்
தவித்து அடுத்த நாள் தேர்வு எழுதி, கோச்சடையான் படம் பார்த்து விட்டு வந்தவனை “தம்பி,
இன்னிக்கி நைட் டியுட்டி, வந்துடு “ என்ற சீனியர்-இன் அழைப்பை ஏற்று சென்று ,
நடக்கும்போதும் தூங்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன் அந்த நைட் டியுட்டியில்.
மேற்கிலே கேயாஸ் தியரி(chaos
theory ) என்று ஒன்று உண்டு என்பதை தசாவதாரம் படத்தில் பட்டாம்பூச்சியை
பின்தொடர்ந்து செல்லும் அந்த ஆரம்ப காட்சிகளில் கமலின் குரலில் “மேற்கிலே கேயாஸ்
தியரி என்று ஒன்று உண்டு அதன் படி ஒரு பட்டம்பூசியின் சிறகடிப்பிற்கும் சூறாவளிக்கும்
கூட தொடர்பு உண்டு” என்று கேட்ட பிறகு தான் தெரியும். சில சமயம் அதை நிஜ வாழ்விலே
பொருத்தி பார்த்ததும் உண்டு. கடந்த மே மாதத்தில் ஒரு சுபயோக சுபதினத்தில்,நான்
வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து மழை. அன்றைய தினம் காலை செய்தியில் தான்
ரமணன் அவர்கள் “ வானத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டிலே சில இடங்களில்
மழை பெய்ய வைப்பு உண்டு” என்று சொன்னார். மழைக்கு ஒதுங்க ஒரு கல்யாண மண்டபம் தான்
கிடைத்தது. அன்று யாருக்கோ கல்யாணம் அங்கு. எங்கள் ஊர் பக்கம் அரிசி சாப்பிடும்
குழந்தைகளிடம் சொல்வார்கள் “வெறும் அரிசி சாப்பிட்டா கல்யாணத்தப்போ மழை பெய்யும்”.
ஒரு வேலை அது நிஜமாக இருந்து அந்த கல்யாண மாப்பிள்ளையோ பெண்ணோ அவர்களது சிறு
வயதில் அரிசி சாப்பிடும்போது அதை மெல்ல செலவழித்த சக்தியில்,.(As there can’t
be 100 percent efficiency, maybe energy released in the form of sound energy
,energy carried by the fine particles thrown out) ஏதாவது
ஒரு பங்கு தான் இத்தனை வருடங்களாய் வலுபெற்று இன்று மேலடுக்கை சுழல வைத்திருக்குமோ
என்ற எண்ண அலைகள் தோன்றியது.
கொஞ்சம் நீளமான,முடிந்தளவு
தமிழில் கொடுக்க முடிந்ததற்கும், இணையத்தில எந்த பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு
காரனமாய் இருந்ததோ. இவ்வளோ தூரம் படிச்சிட்டு "இதனால் தாங்கள் கூற வருவது??" யாரும் கேள்வி கேக்காதீங்க. மழையை போல் தான் கொட்டி தீர்த்தாகிவிட்டது, எந்த குறிப்பிட்ட காரணங்களும் இல்லாமல்.