Thursday, 23 June 2016

பேய்கள் ஜாக்கிரதை


     கடந்த வாரம் விஜய் டிவியில் நடந்த நீயா நானாவில் பேய்கள் பற்றிய நம்பிக்கை கொண்டவர்களுக்கும் மனோதத்துவ நிபுணர்களுக்குமான ஒரு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. சில வருடங்களுக்கு முன்பு இதே போன்று பில்லி சூனியம் தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது, அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது, அதிலும் பில்லி சூனியத்தை கேள்வி கேட்கிறவர்கள் எதிரில் அமர்ந்து கொண்டு அறிவுப்பூர்வமாக கேள்விகள் கேட்டு மாந்திரீகம் செய்பவர்கள் மீது தங்களது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் சிறப்பான விஷயமே, நிகழ்ச்சியின் இறுதியில்,  பங்கு கொண்டவர்களில் சிலர் எதிர் அணியினருடன் சவால் விட்டுக்கொண்டு கிளம்பி சென்றது. மாந்திரீகம் செய்பவர்கள் தங்களை கேள்வி கேட்டவர்களிடம் தங்களது சக்தியை நிரூபித்தால் ஒப்புக்கொள்வீர்களா என்று கேட்டதும் அவர்களும் சரி என்று தலையசைக்க, மந்திரவாதிகளோ, " இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்கு எது வேண்டுமானாலும் தீங்கு நடக்கலாம்" என்று சவால் விட்டனர். அந்த போட்டி என்ன ஆனதென்று இன்று வரையிலும் விஜய் டிவி வெளிச்சத்திற்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில் , உலகம் முழுவதும் ஒரு பேய் படம் கல்லாக்கட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பேய்கள் குறித்தான நம்பிக்கை உடையவர்களுக்கும் மருத்துவர்களுக்குமான ஒரு நிகழ்ச்சி நடத்தியது நல்லதுதான். 
           

       நிகழ்ச்சியில் மருத்துவர்கள் இவர்களிடம் "பேய்கள் இருப்தற்கான சாத்தியகூறுகள் இல்லை, சிலர் பேய் பிடித்தது போல நடந்து கொள்வது என்பது மூளையில் நிகழும் சில அலைகளின் செயல்பாடு, அதை மருத்துவத்தால் குணப்படுத்தி விடலாம், நீங்கள் பேய் பிடித்திருகிறது என்று அவர்களுக்குள்ளே பயத்தை உண்டாக்கி அதை பிரயோகித்து பணம் சம்பாதிக்கிறீர்கள்" என்று முதலில் குற்றம் சுமத்த, அதன் பிறகு கோபிநாத் அவர்கள்," பேய் பிடித்தால் எப்படி ஓட்டுவீரகள்" என்று கேட்டு பேய் பிடித்தது போல நடித்து மாந்திரீகர்களை ஏளனம் செய்யும் விதமாக கேக்க, அதன் பிறகு ஒரு பெண் மருத்துவர் தன் மீது பேய் ஏற்றி விடுமாறு ஒரு மந்திரவாதிக்கு சவால் விட, அவரும் சவாலை ஏற்று கொண்டு தன்னுடைய வித்தையை பிரயோகித்து வெற்றி பெறாமல் வந்து அசடு வழிந்ததும், அந்த மருத்துவர் அதனுள் ஒளிந்திருந்த மனோவசிய நுட்பங்களையும் விளக்கினார்,  இந்த நேரத்தில் வேறொரு மருத்துவர் இந்த மந்திரவாதிகள் ஏமாற்ற பயன்படுத்தும் நுட்பங்களை விளக்கினார், மொத்தத்தில் வந்திருந்த மந்திரவாதிகள் அனைவரையும் கேலிக்கூத்தாக்கினார்கள். ஒரு விதத்தில் இந்த நிகழ்ச்சி மக்களிடையே மூட நம்பிக்கையை விதைத்து பிழைப்பவர்களின் உண்மைத் தன்மையை மேல் கேள்வி எழுப்பியதற்காக நன்றி கூற வேண்டும். 

       
       அதற்கும் மேலாக பலர் எழுப்பும் கேள்வி இதுதான், " கருப்பனையும் காளியையும் வைத்து பிழைப்பவர்களை ஏமாற்றுகாரர்கள் என்று நிரூபித்தீர்களே, அதே தைரியத்துடனும், இவர்களிடம் கையாண்ட அதே எள்ளலுடனும் கர்த்தரையும், பெருமாளையும், சிவனையும், அம்பாளையும் வைத்து பிழைப்பவர்களை ஏமாற்றுகாரர்கள் என்று ஒரு வார்த்தை கூறுவார்களா?" என்பதுதான். பேய் இருக்கிறது என்று இவர்கள் சொல்வதை அறிவியல் கண்ணோட்டத்தோடு கேள்விகள் பல கேட்டு திகைப்படைய வைத்தீர்களே, இதே போன்று நாம் காலம் காலமாக கடைபிடித்து வரும் வழிபாட்டுக்கும் கேள்வி கேளுங்கள்.
பேயை இறக்கி காட்டுங்கள் பார்க்கலாம் என்று அவர் நடத்திய பூஜை தோற்று போனதற்கு பரிகாசம் செயதேர்களே, அதே போன்று வேதங்களின் பெயரால் நடத்தப்படும் எண்ணற்ற பூஜைகளையும் பரீட்சித்து பாருங்கள். பகவான் க்ஷேமம் கிட்டும், அம்பாள் அருள் தருவாள், என்று ஆசை வார்த்தை கூறுபவர்களையும் சோதியுங்கள். அருள் எந்த அலைவரிசையில் வரும் என்று கேள்வி எழுப்புங்கள். க்ஷேமம் எந்த ஷேர் ஆட்டோவில் வரும் என்று கேளுங்கள். 
        

      இந்த இரு விதமான மத நம்பிக்கையும் வளர்ந்தது, ஒன்று பயத்தால். இன்னொன்று ஆசையால். இன்ன பூஜைகளை செய்யாமல் விட்டால் அவன் தண்டிப்பான் என்கிறது ஒரு கோஷ்டி. இன்ன பூஜைகளையெல்லாம் செய்தால் உனக்கு மேலும் மேலும் வளம் பெருகும், மோட்சம் பெறுவாய் என்கிறது வேறொரு கோஷ்டி.
வேண்டுமான அளவிற்கு தன்னகத்தே மூட நம்பிக்கையினை வைத்து கொண்டு, " இந்த மக்களின் மத பழக்க வழக்கம் காட்டுமிராண்டி தனமானது" என்று இழிவுபடுத்தி நம்மை ஆண்டு அனுபவித்து சென்று விட்டான் வெள்ளைக்காரன். இப்போதும் இந்த மேல்தட்டு மக்கள், இது போன்றவர்களை 'நீ காட்டுமிராண்டி' என்று கூறி அவனை விட தான் ஒரு படி மேல் என்று மார்தட்டிகொள்ள ஆசைபடுகிறார்கள் போல. 
     

      அடுத்த தடவை இது போல மக்களிடையே பகுத்தறிவை விளைவிக்க நல்ல நிகழ்சிகளை நடத்துவதாக திட்டம் இருந்தால், ஞாயிறு காலை உங்கள் டிவி யில் வந்து பேசுவாரே ஜக்கி வாசுதேவ், வார நாட்களில் அதிகாலை பக்தி நேரத்தில் வந்து சொற்பொழிவு ஆற்றுபவர்கள். வாழும் கலையை சொல்லித்தருகிறோம் என்று கூறி ஒரு வகுப்பிற்கு கொள்ளையாய் பணம் பிடுங்கி கொண்டு ' நீ இது வரை வாழ்ந்த வாழ்கையே வீணானது, வந்து எங்களுடன் ஐக்கியமாகிவிடு' போன்றவர்களையும் விவாததிற்கு அழைத்தால் உசிதம்.